தருமபுரி

கிருஷ்ணகிரி – தும்பல அள்ளி நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.276 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா வருகிற 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் விழா நடைபெறவுள்ள மைதானத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியர் விவேகானந்தன், காவல் கண்காணிப்பாளர் பண்டித கங்காதர் ஆகியோரிடம் ஆலோசனையும் செய்தார்.

அதன்பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “தர்மபுரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டுவரும் வகையில் நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் கால்வாயை நீட்டிக்கும் திட்டம் மூலம் அம்மன் ஏரியில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கட்டுக்கு தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டது.

தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.276 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நீர்பாசன திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, உதவி ஆட்சியர் ராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார்,

நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், அதி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.