விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் முழுமையாக கடைகளை அடைத்து விட்டனர். சில்லரை வியாபாரிகளின் ஒருசில கடைகள் மட்டும் ஆங்காங்கே உள்ளன.

பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் சரிவர வரவில்லை. இதனால், திறந்திருந்த ஒருசில கடைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டு விட்டன.

வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகள் இன்று காலை வரவில்லை. அனைத்தும் சென்னையின் எல்லைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பழம், பூ மார்க்கெட் ஆகியவையும் இன்று முழுமையாக மூடப்பட்டுவிட்டன. 

பெரம்பூர், வில்லிவாக்கம் அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, மாம்பலம், திருவான்மியூர், குன்றத்தூர் உள்பட பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகியவை முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இதனால், அனைத்து கடைகளும் இன்று முழுமையாக மூடப்பட்டு விட்டன. நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.