நீலகிரி

நீலகிரியில் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய விழாவான கம்பட்ராயர் திருவிழாவை மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் ஆகிய ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரியம், கலாசாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

இதில் கோத்தர் இன மக்கள் ஐயனோர், அம்மனோர் தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வணங்கி வருகின்றனர். அவர்கள் ஐயனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இதனை "கம்பட்ராயர் திருவிழா" என்று அழைக்கின்றனர்.

கோத்தர் இன மக்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கோத்தகிரி அருகே உள்ள திருச்சிகடி கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை தொடங்கியது.

இந்த பண்டிகை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. இந்த நிலையில மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பண்டிகை கொண்டாடப்படுவதால் அம்மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பண்டிகையை முன்னிட்டு ஐயனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அமாவாசை முடிந்து வளர்பிறை தொடங்கும் திங்கட்கிழமை அன்று பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த பண்டிகையின் 9-வது நாளான நேற்று கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர். இதில் முதலில் ஆண்களும், அடுத்து பெண்களும் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து நடனம் ஆடி வழிபட்டனர். அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து வந்தனர். அப்போது 5 பேர் தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனம் ஆடினார்கள்.

இதில் தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கோத்தர் இன மக்களும் பங்கேற்றனர்.