Kodanadu estate Security Murder investigation going on
கொடநாடு எஸ்டேட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் கடந்த 24 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சசிகலா தொடர்பான ஆவணங்களை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் காவலாளியை கொலை செய்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இக்கொலைச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அவரது நண்பர் சயன் என்பவருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே சேலத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே கனகராஜின் நண்பர் சயனும் விபத்தில் சிக்கினார். கோவையில் இருந்து கேரளா தப்பிச் செல்ல முயன்ற போது சயன் சென்ற கார் பாலக்காடு அருகே டேங்கர் லாரி மோதியது.
இதில் மனைவி வினுப்பிரியா 5 வயது குழந்தை ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைபெற்று வரும் நிலையில் சயனிடம் மாஜிஸ்திரேட் நேற்று வாக்குமூலம் பெற்றார். கொலை வழக்கில் தொடர்புடைய இருவரில் கனகராஜ் உயிரிழந்ததும், மற்றொருவர் விபத்தில் சிக்கியதும் என இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கேரளா விரைந்த தனிப்படை போலீசார் 4 இளைஞர்களை அதிரடியாக கைது செய்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், சிசிடிவி, நாய் உள்ளிட்டவைகள் இல்லை என்று கொள்ளைத் திட்டத்திற்கு கனகராஜ் மூளையாக செயல்பட்டார் என்று தெரிவித்தார்.

இதன்பேரில் அங்கு சென்ற கொள்ளையர்கள் போலி அடையாள அட்டைகளை காட்டி பங்களாவுக்குள் நுழைந்தனர் என்றும் அப்போது எதிர்பட்ட காவலாளியை வெட்டிக் கொலை செய்த அவர்கள், பணம் இல்லாததால் ஜெயலலிதா பயன்படுத்திய 5 கை கடிகாரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை திருடிச் சென்றதாகவும் கூறினார்.
திருடிச் செல்லப்பட்ட கை கடிகாரங்கள் கேரளாவில் உள்ள ஆற்றில் வீசப்பட்டதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகம் முரளி ரம்பா தெரிவித்தார்.
இதற்கிடையே கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 7 வாகனங்களில் வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கொடநாடு பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்து பிடிபட்ட நான்கு பேரையும் நடித்து காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
