கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான சயான் மற்றும் இரண்டாவது நபரான வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். மற்ற 8 பேர் கேரளாவில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். தனிப்படை காவல்துறையினர் 150 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டி இருப்பதால் மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், நீதிபதி சஞ்சை பாபாவிடம், அரசு வழக்கறிஞர்கள், தெரிவித்தனர்.

மேலும் வாளையாறு மனோஜ் தனது நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் அளிக்க கோரி மனு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என்றும் வாதிட்டனர். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனோஜிற்கு நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரிய மனு மீது, பின்னர் தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு, ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர் தனிப்படை போலீசார். 

இந்நிலையில் நேற்று கொடநாடு வழக்கு குறித்து சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓவுமான விவேக் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோடநாடு பங்களாவோடு தொடர்புடைவர் விவேக் என்பதால், அவரை சென்னையில் இருந்து கோவை வரச்சொல்லி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேப்போன்று குறிப்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விசாரணை நடைபெற்றது.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையும், கோவையில் 2 முறையும் வைத்து விசாரணை நடைபெற்றது. மேலும் ஏற்கனவே, இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சயான், மனோஜ் உள்ளிட்டோரிடமும் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் தனபால் மற்றும் நண்பர் ரமேஷ், தற்கொலை செய்துக்கொண்ட தினேஷின் குடும்பத்தினர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது விவேக்கிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.