பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் கைவிரல் துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மதுரை, திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் அர்ஜுன் (18). தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகிறது.

திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி பயின்று வருகிறான் மாணவன் அர்ஜுன். இன்று காலை பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அர்ஜுனிடம் வந்த சக மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் அர்ஜுனிடம் தகராறு செய்தனர். இதில் அர்ஜுனை அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் அர்ஜுனின் கைவிரல் துண்டானது. அர்ஜுனை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அர்ஜுனை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அர்ஜுன் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட செம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் அர்ஜுனை தாக்கிய சக மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.