கோவை,
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வெளியிட்டனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த மாதம் 22–ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த அன்று சசிகுமார் மோட்டார் சைக்கிளில் சென்ற சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சிலர் சசிகுமாரை பின்தொடர்ந்து சென்றது தெரிய வந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது போலி எண் பொருத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குற்றவாளிகள் அவரை பின்தொடர்ந்து கண்காணித்தது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரை அந்த பகுதியில் இருக்கும் செல்லிடைப்பேசி கோபுரத்தில் பதிவான செல்லிடைப்பேசி எண்களை காவல்துறையினர் கணக்கெடுத்தனர். அந்த எண்களுக்கு போன் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு சசிகுமாரின் எண்ணுக்கு போன் செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகத்துக்குரிய நபர்களின் படங்களை காவல்துறையினர் வெளியிட்டனர். கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட குற்றவாளி ஒருவரின் மாதிரி வரைபடத்தை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர் பற்றி விவரம் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், “சசிகுமாரின் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் உதவியுடன் குற்றவாளியின் மாதிரி உருவப்படம் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்த விவரம் யாருக்காவது தெரியவந்தால் உடனடியாக கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குச் சென்று தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும்” என்று அவர்கள் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
