kidney sale for debt issue woman complaint to erode collector

கடனை திருப்பி செலுத்த முடியாததால், தனது கணவரின் கிட்னியை விற்க கந்துவட்டி கும்பல் கட்டாயப்படுத்துவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சம்பூரணம் என்ற பெண் புகார் அளித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே நேற்று தீக்குளித்த நிலையில், கந்துவட்டி கொடுமை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கந்துவட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோல கந்துவட்டி தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ரவி என்ற நெசவுத் தொழிலாளியின் மனைவி சம்பூரணம் என்பவர், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது கணவரின் கிட்னியை விற்க கந்துவட்டி கும்பல் கட்டாயப்படுத்துவதாகவும் தனது கணவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் ரூபாயை ரவி கடனாக வாங்கியுள்ளார். சாதாரண நெசவுத் தொழிலாளியான அவர், தொடர்ந்து வட்டி கட்டி வந்துள்ளார். ஆனால் அவரால் அசலை திருப்பி செலுத்த முடியவில்லை. 

இந்நிலையில்தான், அவரது கிட்னியை விற்க கந்துவட்டி கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவியின் மனைவி சம்பூரணம் அளித்த புகார் மனுவை பெற்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.