அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 7 மணிநேரத்தில் மீட்டனர். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (24). இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதி கடந்த 8ம் தேதி பிரசவத்துக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் மாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

நேற்று மதியம் ஜோதி, சுமார் 1 மணியளவில் பிரசவ வார்டில் தனது குழந்தையுடன் படுத்திருந்தார். அப்போது, டாக்டர்கள் அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்தனர். உதவிக்கு யாரும் இல்லாததால் ஜோதி, தனது பக்கத்தில் இருந்த கர்ப்பிணி ஒருவரிடம், தூங்கி கொண்டிருந்த குழந்தையை பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது, குழந்தையையும், அங்கிருந்த கர்ப்பிணி பெண்ணையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடனே ஜோதி, அங்கிருந்த டாக்டர்களிடம் கூறி கதறி அழுதார். அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, பிரசவ வார்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வுசெய்தனர். 

அப்போது, கர்ப்பிணி ஒருவர், ஜோதியின் குழந்தையுடன் வெளியே செல்லும் காட்சியும், ஒரு ஆம்னி வேனில் ஏறி, அவர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து திருச்சி ரோட்டில் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார், கேமரா பதிவான காட்சிகளை வைத்து, தீவிரமாக விசாரித்தனர்.

இதற்கிடையில், கேமராவில் பதிவான காட்சியை வைத்து, கால் டாக்ஸி டிரைவர் அசோக் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். விசாரணையில், இவரது கால் டாக்சியில் ஜோதி சென்றது தெரியவந்தது. இதன்பின், அசோக் கொடுத்த தகவலின்பேரில், கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருந்த அர்ச்சனா (23) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஜோதியின் குழந்தையை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட அர்ச்சனாவிடம் விசாரித்தபோது, திருமணமாகி 4 ஆண்டு ஆகியும் தனக்கு குழந்தையில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் மலடி என்று கூறியதால் குழந்தையை கடத்தினேன் என்று போலீசிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அர்ச்சனாவின் கணவர் நரேஷ், தாய் பேபி, தந்தை ராமலிங்கம், மாமியார் கோமி, மாமனார் பாபு ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதியம் 1 மணிக்கு கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை இரவு 8 மணியளவில், அதிரடியாக மீட்கப்பட்டு, மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.