திண்டுக்கல்
 
கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கஞ்சா கடத்திய இளைஞர் திண்டுக்கல்லில் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் ஆய்வாளர் கவு‌ஷர்நிஷா, உதவி ஆய்வாளர்கள் சந்திரன், காஞ்சித்தலைவன் மற்றும் நேற்று அதிகாலை திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்தது. இதனைக் கண்ட காவலாளர்கள், அஞ்சலி ரௌண்டானா அருகே அந்த காரை மடக்கினர். பின்னர் அதனை சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் இரண்டு மூட்டைகளில் மொத்தம் 60 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து காரை ஓட்டி வந்த இளைஞரை காவலாளர்கள் பிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள ஆலவன்னா பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் மகன் பவாஸ் (26) என்பது தெரியவந்தது. 

மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று, கேரள மாநிலத்தில் விற்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் கடத்தலில் ஈடுபட்டாராம். 

இதுகுறித்து திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து பவாசை கைது செய்தனர். கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.