நீலகிரி

தமிழகத்தில் கொட்டுவதற்காக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு லாரிகளை நள்ளிரவில் மறித்த நாம் தமிழர் கட்சியினர் லாரியை திருப்பி அனுப்பும்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா நாடுகாணி கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தமிழக காவலாளர்கள் சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர். இங்கு வாகன சோதனையும் நடத்தப்படுவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கேரள மாநிலம், பெருந்தல்மன்னாவில் இருந்து இரண்டு சரக்கு லாரிகள் நாடுகாணி சோதனைச் சாவடி நோக்கி வந்தது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளை கூடலூர் பகுதியில் கொட்டுவதற்காக சரக்கு லாரிகள் வந்துள்ளது என்று தெரிவித்தனர். மேலும, இந்த லாரிகளை தமிழக பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி வழிமறித்தனர். 

பின்னர் அங்கு நின்றிருந்த காவலாளர்கள் நாம் தமிழர் கட்சியினரை கலைந்து செல்லுமாறு கூறினர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகளை காவலாளர்கள் சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் காவலாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நேரத்தில் நாடுகாணி பகுதி மக்களும் அங்கு வந்து லாரிகளில் மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, காவலாளர்கள் சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், காவலாளர்கள் சோதனையிட மறுத்துவிட்டனர். 

அப்போது லாரிகளில் இருந்த ஒட்டுநர்கள் இரவு கூடலூரில் தங்கிவிட்டு காலையில் கர்நாடகாவுக்கு செல்கிறோம் என்று கூறினர். இதனை நாம் தமிழர் கட்சியினர் ஏற்கவில்லை. முறையாக சோதனை நடத்தினால் மட்டுமே லாரிகளில் மருத்துவக் கழிவுகள் இருப்பது தெரியவரும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். 

இப்படி மாநில எல்லையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் காணப்பட்டது. அதன்பின்னர் இரவு 1 மணிக்கு 2 லாரிகளையும் தேவாலா காவலாளார்கள் திருப்பி அனுப்பினர். 

இதனைத் தொடர்ந்து லாரிகள் வந்த வழியாக திரும்பி மீண்டும் கேரளாவுக்குச் சென்றது. அதன்பின்னரே நாம் தமிழர் கட்சியினரும், கிராம மக்களும் கலைந்து சென்றனர்.