கோயம்புத்தூர்

ஏற்கனவே தடுப்பணைகள் கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்திய கேரள அரசு தற்போது பவானி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமையில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டியுள்ளன. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

இந்நிலையில் கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இதற்கு தடையாணப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் தடுப்பணைகளை கட்டிவிட்டால் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து கோவை பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்தார். அதனையேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்