கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை தயார் செய்வதில் மிகப்பெரிய சதி நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சிறிய கிராமம் கீழடி. கடந்த 2014ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை இங்கு ஆய்வை தொடங்கியது. 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழடி பகுதியில் வெறும் 50 சென்ட் இடத்தில் மட்டும்தான் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இந்த அகழாய்வின் போது கி.மு 3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 10ம் நூற்றாண்டு வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறையை தெரியப்படுத்தும் ஏராளமான பொருட்கள் கிடைத்தன.

 

அதிலும் கீழடியில் கிடைத்திருப்பது நகர நாகரீகம் தொடர்புடைய பொருட்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழன் நகர நாகரீகத்தை கொண்டிருந்தான் என்பதற்கு சான்றாக கீழடி அகழாய்வு இருந்து வருகிறது. 2 ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வின் முடிவாக சுமார் 7000 பண்டைய கால பொருட்கள் கிடைத்தன. அந்த பொருட்கள் அனைத்துமே சுமார் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று உறுதிப்படுத்தப்பட்டன. கீழடியில் கிடைத்த தொன்மையான பொருட்களில் இரண்டை அமெரிக்காவிற்கு அனுப்பி அதன் காலத்தையும் தொல்லியல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அளவிற்கு சிறப்பாக கீழடி ஆய்வு நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஆய்வை நிறுத்திக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் கீழடியில் ஆய்வை மிகச்சிறப்பாக செய்துவந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கெல்லாம் காரணம் கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் மூலம் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்களுக்கு சவால் விடும் வகையில் கீழடியில் தமிழர்களின் வாழ்க்கை முறை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. கீழடி தொடர்பான தகவல்கள் வெளிப்படும்பட்சத்தில் இந்தியாவில் மிக மூத்த குடியாக தமிழ்க்குடியை அங்கீகரிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மத்தியில் உள்ள சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

 அதுவும் கீழடி தொடர்பாக சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை வைத்து ஆய்வறிக்கையை தயார் செய்வதே சரியாக இருக்கும். அப்போது தான் கீழடியின் சிறப்பு உலகிற்கு எவ்வித ஒளிவு மறைவும் இன்றி தெரியவரும். ஆனால் மத்திய அரசோ கீழடி அகழாய்வுக்கு தொடர்பே இல்லாத வேறு சிலரை வைத்து அறிக்கை தயார் செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. 

அமர்நாத் ராமகிருஷ்ணனை தவிர வேறு யார் கீழடி அகழாய்வு அறிக்கையை தயார் செய்தாலும் தமிழர்களின் தொன்மையை நியாயப்படி வெளிப்படுத்த முடியாது என்று தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்த ஆரம்பித்தனர். வைகோ, ஜி.ராமாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழர்களின் தொன்மையை புலப்படுத்தும் கீழடி அகழாய்வை சீர்குலைக்க நடைபெறும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்களும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.