kathiramangalam ongc pipeline
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே O.N.G.C. குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதனை சீர் செய்யும் பணிகளில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், மத்திய அரசின் ஓ.என்.சி.ஜி. நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டதால், அவற்றை புதுப்பிக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த மாதம் முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுப்பிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கதிராமங்கலம், வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே குத்தாலம் செல்லும் ஓ.என்.சி.ஜி. பைப்லைன் வெடித்து எண்ணை திபு,திபுன்னு வெளியேறி விளைநிலங்கள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அந்த கழிவின் வாடை காற்றில் சுற்றுவட்டாரமே நாற்றமெடுத்துள்ளது. எந்த நேரமும் தீப்பிடிக்கும் அபாய நிலை உருவாகியிருக்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினரும் ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளும் குவிந்தனர்.
விரைந்து சென்ற கும்பகோணம் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தினார். குழாய்களை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ONGC குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக தொடர்ந்து வயல்களில் எண்ணெய் வெளியேறிவருகிறது. இதனால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் கொண்டு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
