நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக கருணாஸ் 5 கோடி ரூபாய் பெற்றதாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் யாருடைய ஆலோசனையும் இன்றி திடீரென நீக்கினார். இதையடுத்து மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில்  கருணாஸை அந்த அமைப்பில் இருந்து நீக்கினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்,தான் நடிக்கும் படங்களில் செய்யும் காமெடிகளைத்தான் முக்குலத்தோர் புலிப்படை  அமைப்பிலும் செய்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.

கூவத்தூர் பங்களாவில் கருணாஸ் இருந்தபோது சசிகலா தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்துவிட்டதாகவும் அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் உண்மையில் கருணாஸ் ஐந்து கோடி ரூபாய் பெற்றதாகவும், அதை மறைத்துவிட்டு தங்களிடம் ஒருகோடி தான் பெற்றதாக கருணாஸ் பொய் கூறியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.