தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக, சில தினங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தொண்டர்கள், காவேரி மருத்துவமனை முன் அலைக்கடலென திரண்டிருந்தனர். எழுந்து வா தலைவா! என அவரது தொண்டர்கள் முழங்கிய முழக்கத்தின் இடையே, கருணாநிதியின் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தது.

அவரது உடல் நலம் தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றத்தில் இருந்த நிலையில், தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் வந்து சந்தித்தனர். காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர், கேரள முதல்வர், என பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்து கருணாநிதியை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.
அதே போல ரஜினி ,கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற திரைத்துறை பிரபலங்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். 

நன்கு உடல் நலம் முன்னேறி நாற்காலியில் உட்காரும் அளவிற்கு தேறி வந்த அவரது உடல் நலனில், தற்போது திடீரென பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.இதனால் பேரதிர்ச்சி அடைந்த திமுக தொண்டர்கள், தற்போது காவேரி மருத்துவமனை முன் மாபெரும் அணியாக திரண்டிருக்கின்றனர். கலைஞர் மீண்டும் நலம்பெற்று வரவேண்டும் எனும் ஏக்கத்தில் கூடி இருக்கும் அவர்களுக்கு சாதகமான செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. மிகுந்த பரபரப்பு நிலவும் இந்த சூழ்நிலையில் அரசு மதுபானக்கடைகள் அனைத்தையும், இன்று மாலை 6 மணிக்குள் மூடும்படி அரசு உத்தரவிடிருக்கிறது. மனவருத்தத்தில் இருக்கும் தொண்டர்கள் யாரும் மது பானத்தை அருந்திவிட்டு, எந்த வித அசம்பாவிதத்திலும் ஈடுபட்டுவிடக்கூடாது எனும் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.