Karnataka plan to drive water to irrigation to irrigation
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரையும் அணைகளில் தேக்கி சட்டவிரோதமாக பயன்படுத்திக்கொள்ளும் கர்நாடக அரசு, இப்போது தென்பெண்ணை தண்ணீரையும் ஏரி, குளங்களுக்கு திருப்பி பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி விட்டது. கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும்படி பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தியும் அதை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கர்நாடகத்திலுள்ள நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் ஏராளமான ஏரி, குளங்களை நிரப்பிய பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் பாய்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக பாயும் இந்த ஆறு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் இந்த ஜீவநதி மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீருக்குத் தான் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரிலிருந்து ஒவ்வொரு நாளும் 148 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 99கோடி லிட்டர் கழிவு நீர் பெங்களூரு நகருக்கு வெளியில் உள்ள பெல்லந்தூர், வரத்தூர் ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டு, தென்பெண்ணையாற்றில் கலக்கவிடப்படுகிறது. இந்த கழிவு நீர் தென்பெண்ணையாற்றில் கலந்து தமிழகத்திற்கு வருவதால், அதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
அதைப்பயன்படுத்திக் கொண்ட கர்நாடக அரசு, பெல்லந்தூர், வரத்தூர் ஏரிகளில் சேரும் தண்ணீரை சுத்திகரித்து குழாய்கள் மூலம் கோலார், சிக்கபல்லப்பூர் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்தது. பெல்லந்தூர், வரத்தூர் ஏரிகளில் சேரும் கழிவுநீரை சுத்திகரித்து இந்தத் திட்டத்திற்காக பயன்படுத்தப் போவதாக கர்நாடக அரசு அதன் திட்ட அறிக்கையிலும், பொது அறிக்கையிலும் கூறியிருந்தாலும் கூட உண்மை அதுவல்ல. வழக்கம் போல கழிவுகளை தென்பெண்ணையாற்றில் திறந்து தமிழகத்திற்கு அனுப்பி விட்டு, தென்பெண்ணையாற்று நீரை இந்த இரு ஏரிகளிலும் நிரப்பி அவற்றை கோலார், சிக்கப்பல்லப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். இதை கர்நாடக அரசு வெளியில் சொல்லாமல் மறைக்கிறது.
பெல்லந்தூர், வரத்தூர் ஏரிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் வறண்ட பூமியான கோலார், சிக்கப்பல்லப்பூர் மாவட்டங்களில் உள்ள 134 பெரிய ஏரிகளில் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப் படும். அதன்பின் ஏரிகளில் உள்ள நீர், நிலத்தடி நீர் ஆகியவற்றைக் கொண்டு பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யவும், தொழிற்சாலைத் தேவைகளுக்கு தண்ணீர் வழங்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தின் இரு மாவட்டங்கள் செழிக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் கூடுதலான நிலங்கள் பாசன ஆதாரங்களை இழந்து தரிசாக மாறும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கே.சி. பள்ளத்தாக்குப் பாசனத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது ஜனவரி இறுதியில், இத்திட்டத்தின் திறப்பு விழாவை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மட்டும் காவிரியில் கிடைத்த நீராக கர்நாடக அரசு கணக்கு காட்டுகிறது. இது தவிர சுமார் 40 டி.எம்.சி தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைக்கும் கர்நாடக அரசு, அதை அதன் சொந்தப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகிறது. அதேபோல், தென்பெண்ணை நீரையும் கணக்கில் காட்டாமல் பயன்படுத்திக் கொள்ளவே இத்திட்டத்தை கர்நாடகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தை கர்நாடக அரசு உருவாக்கிய காலத்திலிருந்தே அதை தடுத்து நிறுத்தும்படி பாமகவும், உழவர் அமைப்புகளும் வலியுறுத்திய போதிலும் திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்ததன் விளைவாக தென்பெண்ணை நீரை தமிழகம் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
தென்பெண்ணை நீரை பயன்படுத்துவதற்கான கே.சி. பள்ளத்தாக்குப் பாசனத் திட்டத்தை ரூ.1280 கோடி செலவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வரும் ஜனவரிக்குள் 18 மாதங்களில் கர்நாடகம் செயல்படுத்தி முடிக்கவுள்ளது. கிட்டத்தட்ட இத்திட்டத்தைப் போன்றது தான் அத்திக்கடவு& அவினாசி திட்டமுமாகும். ஆனால், அதை 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றன. மக்கள் நலனையும், உழவர்கள் நலனையும் காப்பதில் தமிழக அரசுக்கும், அண்டை மாநில அரசுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.
பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திறனில்லாத தமிழக அரசு, தென்பெண்ணையாற்று பாசன மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான சட்டப்பூர்வ, அரசியல் பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
