கந்த சஷ்டி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. திருச்செந்தூரில் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம்.!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் வெகு பிரசித்தி. ஒவ்வோர் ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும்.
அறுபடை முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கந்த சஷ்டி விரதத்தின் சிகர நிகழ்வாக கருதப்படுகிறது சூரசம்ஹாரம். முருக பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அறுபடை முருகன் கோயில்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து முருகன் கோயில்களிலும் நடைபெற்றது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் வெகு பிரசித்தி. ஒவ்வோர் ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். இதில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர்.
ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதிமதிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்வையொட்டி நேற்று கோயிலில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர், வள்ளினை அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைஅம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலையில் உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்றது.
கோயிலில் மதியம் 1 மணியளவில் மாலை சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் கடற்கரை சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படாததால், கடற்கரை முகப்பில் மூன்று பக்கமும் தகரகத்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. திருச்செந்தூர் மட்டுமல்லாமல், அறுபடை முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தேறியது. சூரசம்ஹார நிகழ்வு இன்று நிறைவடைந்த நிலையில், நாளை விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.