Kamal Speech Controversy

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது காவிரி விவகாரம் குறித்து
இருவரும் விவாதித்தனர். இதன் பிறகு, குமாரசாமி - கமல் ஹாசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய கமல், சகோதரத்துவத்துடன் இரு மாநிலங்களும் இருக்க வேண்டும் என்றார். கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் பிரச்சனையைத் தீர்த்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல. 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை உள்ளது. கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் திரையிடுவது பற்றி எதுவும் பேசவில்லை என்றார். தான் தமிழ்நாட்டு பிரதிநிதியாக கர்நாடகம் வந்துள்ளதாகவும் கமல் கூறியிருந்தார்.

முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி பேசுகையில், காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று
கூறியிருந்தார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கமல் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும என்று கமல் கூறியிருப்பதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம்
தீர்ப்பு வெளியான பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தை தேவையா என்றும், கர்நாடக முதலமைச்சரை கமல் சந்தித்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம்
என்றும் காவிரி உரிமை மீட்புகுழுவைச் சேர்ந்த பெ.மணியரசன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கமல் தமிழகத்தின் பிரதிநிதியா, கர்நாடக பிரதிநிதியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் சார்ப்பில் பேச யார் கமலை
அனுப்பியது என்றும் மணியரசு கேள்வி எழுப்பினார். காவிரி தீர்ப்பு வந்த பிறகு இனி பேசி தீர்க்க என்ன இருக்கிறது? இதற்கு என்ன அர்த்தம். தீர்ப்பு வந்தபிறகு மீண்டும் பேசுவதற்கு என்ன இருக்கிறது... இது துரோகம் இது குறித்து கமல் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

பி.ஆர்.பாண்டியன் கூறும்போது காவிரி தீர்ப்பையே கமல் அவமதித்து விட்டார் என்று கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். தமிழக மக்களை அழிக்கவே குமாரசாமியை கமல் சந்தித்துள்ளார்.