திருச்சி

கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது முகவரிக்கு திருச்சியைச் சேர்ந்த ரசிகர்கள் 60 பேர் இணையவழி அஞ்சல் (இ-போஸ்ட்) மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக தமிழக அரசியலை கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன். மக்களும் தமிழக அரசியல்வாதிகள் மீது இருக்கும் தங்களின் ஆதங்கத்தை திரைப்பிரபலம் தெரிவிக்கின்றார் என்று கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இதில், அவரது ரசிகர்களை தவிர்த்து மற்ற இளைஞர்கள் கூட கமலுக்கு பச்சைக்கொடிதான்.

"அரசியலில்தான் இருக்கிறேன்" என்று கமல் சொன்ன ஒற்றை வார்த்தை ஆட்சியைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கிளையை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுப்போடும் அனைவரும் அரசியலில்தான் இருக்கிறோம் என்று அரசியல்வாதிகள் மறந்துவிட்டனர் போல.

அதனைத் தொடர்ந்து ஆளும் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ஆளும் கட்சியின் மீது கடுப்பில் இருக்கும் மக்களுக்கு, அதிமுக அமைச்சர்களின் இந்த செயல் மேலும் கோபத்தை கிளப்பிதான் இருக்கும்.

தமிழகத்தில் ஊழல் இருக்கிறது என்று நிரூபிக்க முடியுமா? என்று புத்திசாலிதனமாக கேட்டு கமலை மடக்கி விடலாம் என்று அதிமுக பிரமுகர் ஒருவர் கேட்க, "ஊழல் பட்டியலை அரசுக்கு அனுப்புங்கள்" என்று தனது நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அறிவித்த அடுத்த நாளே யூ-டியூப்பில் வெளியானது தமிழக அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் அட்டூழியங்கள்.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற முன்னாள் செயலாளர் என்.சாரதி, துணைச் செயலாளர் பி.கே.சீனிவாசன், பொருளாளர் எம்.குணசேகரன், முன்னாள் மாநிலப் பொறுப்பாளர் உறந்தை மு.பிச்சையா உள்ளிட்ட 60 பேர் நேற்று தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை இ-போஸ்ட் மூலம் அனுப்பியுள்ளனர்.