kallanai and bavani dams open
பாசனத்துக்காக கல்லணை மற்றும் பவானி சாகர் அணைகள் திறப்பு !! விவசாயிகள் மகிழ்ச்சி !!!
டெல்டா மற்றும் சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளின் பாசனத்துக்காக கல்லணை மற்றும் பவானி சாகர் அணிகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ள நிலையில் டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் இன்று காலை கல்லணை வந்து சேர்ந்தது. இதையொட்டி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி கல்லணையில் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பூங்காவில் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் அங்குள்ள காவிரிதாய் சிலை அகத்தியர் சிலை, கரிகாற்சோழன் சிலை, ராஜ ராஜ சோழன் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் அமைச்சர்கள், கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்தனர். முதலில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதே போன்று சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின், இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.
