விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடலூரை அடுத்த செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கையால் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 45 வங்கி பாஸ் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.அந்த பித்தகங்களில் அடிப்படையிலும், வங்கி லாக்கரிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பாபுவின் 2 வங்கி லாக்கர்களில் நடத்தப்பட்ட சோதனையில் 9.50 கிலோ தங்கம், 21 கிலோ வெள்ளியையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது. மேலும் 4  லாக்கர்களில் சோதனை செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.