திமுக மீது நீதிபதி பாகுபாடு காட்டக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டு!
நீதிபதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு திமுக மீது மட்டும் பாகுபாடு காட்டக் கூடாது என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
திமுக.வை சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், 2 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், 2 அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு திமுக மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதை உள்ளது. நீமன்றத்தின் வாயிலாக பல வெற்றிகளை பெற்றுள்ளது திமுக. ஆனால், தற்போதைய விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பது எங்களது கடமை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
“ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீதிபதிகள் பழிவாங்கப்பட்டது நாடறியும். நீதிபதிகளின் குடிநீர் இணைப்பு, மின்சாரம் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் நடந்தன.கஞ்சா வழக்குகள் போடப்பட்டன. இதெல்லாம் வரலாறு. அந்த சமயங்களில் திமுக அதனை கண்டித்தது. நீதிமன்றத்தின் மீது மிகவும் மரியாதையோடு நாங்கள் இருக்கிறோம்.” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டரில் ரூ.3600 கோடிக்கு ஊழலும், முறைகேடும் நடந்துள்ளது என்று 2018ஆம் ஆண்டில் அவர் மீது நான் தொடந்த வழக்கில், வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை வாங்கினார். அந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் முன்னிலையில் வந்தபோது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க கூடாது என்றார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறிய அதே நீதிபதி, இரண்டு வாரம் கழித்து வெறும் 44 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது தாமாக முன்வந்து விசாரிப்பதாக கூறி, நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்று கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக நடைபெற்ற பொன்முடி வழக்கில் அவர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டும் கூட, அதனை தாமாக முன்வந்து விசாரிப்பேன் என்று சொல்லியுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதேபோல், தங்கம் தென்னரசு மீதான 74 லட்சம் ரூபாய் வழக்கு. அந்த பணத்தை கொண்டு நங்கநல்லூரில் 600 சதுர அடி நிலம் வாங்கலாம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கில் உள்ள தொகைக்கு 400 சதுர அடி நிலம் வாங்கலாம். இந்த அளவுக்கு தொகை கொண்ட வழக்கை பொன்னான நேரத்தை ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி சொல்லியுள்ளார். இதனை நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம்.” என்று ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம் தெரிவித்தார்.
இதுபோன்ற வழக்குகளில் அதிமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.பாரதி, “அவர்கள் எந்தமுகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களோ, அதே அடிப்படையில்தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கபட்டுள்ளனர். அதே அதிமுக அமைச்சர்கள் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். ஆனால், திமுக மீது மட்டும் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. நீதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால், அது உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அதிமுகவினரை விசாரிக்காமல், திமுகவினரை மட்டும் விசாரிப்பேன் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.” என்றார்.
மேலும், “இதே நீதியரசர்தான், நான் ஒரு கூட்டத்தில் பேசிய விவகாரத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. எனவே, இதையெல்லாம் வைத்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வாதாடுவோம். அங்கு எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதுபோன்ற அறிவிப்புகள் வரும்போது திமுக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. மற்றபடி, நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.