கருவில் உள்ள சிசு, ஆணா , பெண்ணா என கண்டறிந்து தெரிவித்த எத்தனை மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்பதை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததாக நெய்வேலியை சேர்ந்த மருத்துவர் ராமசந்திரனின் பதிவை ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து ராமசந்திரன் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கவுன்சிலால் தண்டிக்கப்பட்ட டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறு தண்டிக்கப்பட்டும் தொடர்ந்து மருத்துவம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பதவிகாலம் முடிந்துவிட்டது என்றும், இடைகால தலைவராக நியமிக்கப்பட்டவரும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சடகோபன் வரும் 5ம் தேதி தான் பொறுப்பேற்க உள்ளார் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

 இதையடுத்து நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறியும் மையங்களில், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மையங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியுள்ளது என்பதையும், எத்தனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நான்கு வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும், தண்டிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட டாக்டரை இடைநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது, ஆண்டுக்கு 5 ஆயிரம் பெண் சிசுக்கள் கருகலைப்பு மூலம் கொல்லப்படுகின்றன எனவும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், பிறக்கும் குழந்தை ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என தீர்மானிப்பதா எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.