Judge kirubaakaran raise questions against JACTO-GEO protests
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான நிகரான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு கவுன்சிலிங் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றொரு வழக்குடன் இதை விசாரிப்பதாகக் கூறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
சங்கங்கள் அமைத்து செயல்படுவதால் தங்களை உச்சபட்ச அதிகாரமாக ஆசிரியர்கள் கருதக்கூடாது. அதிகமான சம்பளம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களைப் போல நடந்துகொள்ளக்கூடாது. ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற 5 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது ஆசிரியர்களுக்குத்தான் அவமானம். மருத்துவம், காவல்துறை, கல்வி ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் சங்கம் அமைக்கக்கூடாது என கூறினேன்.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள், எதிர்காலத்தில் நீதிகேட்டு நீதிமன்றத்தை நாடமுடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போராட்டம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக வரும் 18-ம் தேதி அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கின் விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
