ராமநாதபுரத்தில் ரவுடி கோவிந்தன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன். ரவுடி ஆன இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. 

இந்நிலையில் நேற்றிரவு பெண் ஒருவரின் தங்கச் சங்கலியை பறித்து ஓடிய கோவிந்தனை சரணடையுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அரிவாளால் காவலர்களை தாக்கி விட்டு கோவிந்தன் தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். 

இதில் குண்டடி பட்ட ரவுடி கோவிந்தன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிவாளால் தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆய்வாளர் தங்க முனியசாமி, தலைமைக் காவலர்  சவுந்திர பாண்டியன் ஆகியோர் திருவாடனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே காயமடைந்த காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளரிடம் ராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி கர்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.