லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின், தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தவெக-வை கட்டுப்படுத்த திமுக அனுப்பியவர்தான் ஆதவ் என்றும், அவர் குடும்ப தொழிலை கைப்பற்ற முயன்றதாகவும் சார்லஸ் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கட்சி தொடங்கி முதல்வர் ஆகும் கனவுடன் மும்மரமாக செயல்பட்டு வருகிறார் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் தனது மைத்துனர் ஆதவ் அர்ஜூனா பற்றி பரபரப்பை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சார்லஸ் மார்ட்டினின் குற்றச்சாட்டு

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சார்லஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. “ஆதவ் அர்ஜுனா எங்கள் தங்கை மூலம்தான் குடும்பத்திற்குள் வந்தார். மருமகனாக வீட்டிற்கு வந்தவர், முதலில் எங்கள் குடும்பத் தொழிலைக் கைப்பற்றப் பார்த்தார். திமுகவில் மாப்பிள்ளை - பையன் இடையே பிரச்னையை ஏற்படுத்தினார். சரித்திரப் பதிவேடு குற்றவாளி போன்றவர் ஆதவ்” என்று அவர் கூறியுள்ளார்.

“ஜான் ஆரோக்கியசாமியையும் ஆதவ் அர்ஜூனாவையும் தவெகவிற்கு அனுப்பியதே திமுகதான். தவெக எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக அனுப்பப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜூனா” எனத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் வேறு கூட்டணிக்குச் செல்லாமல் இருந்தாலே மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதுதான் திமுகவின் கணக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னை இரண்டு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினார் ஆதவ். அதன் பிறகு திமுகவுக்கு சென்றார். அங்கே முதல்வரின் மாப்பிள்ளை சபரிசனுக்கும் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் பகையை ஏற்படுத்தினார் என்றும் சார்லஸ் பேசியுள்ளார்.

யார் இந்த சார்லஸ் மார்ட்டின்?

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவரது சகோதரி டெய்சி மார்ட்டினை காதல் திருமணம் செய்து கொண்டவர் தான் தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. லாட்டரி அதிபர் மார்ட்டினின் பல லட்சம் சொத்துக்களுக்கு வாரிசுள் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும், மகள் டெய்சியும் மட்டுமே.

கோவையைச் சார்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரரும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் மற்றும் தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை திருமணம் செய்து கொண்டதால் சொத்து தொடர்பாக மார்ட்டின் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வாய்ஸ் ஆப் காமென்ஸ் நிறுவனத்துக்காக மார்ட்டினின் நிறுவனத்திலிருந்து ஆதவ் அர்ஜூன் ₹82.5 கோடி கடன் பெற்று இருந்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது.