இராமநாதபுரம்

அரசு நலத்திட்டங்கள், சிறப்புப் பயிற்சிகள் பெற அனைவரும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் 1162 அரசுப் பள்ளிகள் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சிறப்பான கட்டமைப்பு மற்றும் கற்றல், கற்பித்தல் வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. 

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சத்துணவு, சீருடை, காலணிகள், இலவச பேருந்துப் பயண அட்டை,  மிதிவண்டி, மடிக்கணினி, விபத்தில் பெற்றோரை இழந்தை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.75 ஆயிரம், தேசிய வருவாய் மற்றும் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 என்பன உள்பட 14 வகையிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவை தவிர 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி வருவாய் வழித் தேர்வு, 9-ஆம் வகுப்பினருக்கு ஊரக திறனறித் தேர்வும்,10-ஆம் வகுப்பினருக்கு தேசிய திறனறித் தேர்வும், 12- ஆம் வகுப்பினருக்கு மருத்துவப் படிப்பிற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கும் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. 
 
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புக்கவனப் பயிற்சியும், அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு அடைவுத்தேர்வும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. 

10-ஆம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை இனம் கண்டு அவர்களை மீள்திறன் சிறப்புப் பயிற்சிப்பள்ளியில் சேர்த்து மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.  

எனவே, அரசு நலத்திட்டங்கள், சிறப்புப் பயிற்சிகள் பெற அனைவரும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.