Jodhpur - Jyovinar 1090 arrested in Pudukottai This includes 570 women ...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஆட்சியரகம் அருகே போராடிய ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த 570 பெண்கள் உள்பட 1090 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
“புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்புக் காலமுறை ஊதிய பணி முறைகளை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஏழாம் நாளான நேற்று புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் க.கருப்பையா, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் எம்.ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
ஆனால், போராட்டத்திற்கு காவலாளர்கள் அனுமதி தராததால் ஊழியர்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, அனைவரும் ஆட்சியரகம் எதிரே உள்ள வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் ஆ.மணிகண்டன், அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் ஆர். ரெங்கசாமி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைப் பொதுச் செயலர் அ.செல்வேந்திரன், 570 பெண்கள் உள்பட 1090 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, பிற்பகலில் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்ததால் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை காவலாளர்கள் விடுதலை செய்தனர்.
