Jewelry to the passengers in the running train After stealing in 2015 the people who went to jail returned

வேலூர்

ஜோலார்பேட்டை அருகே ஓடும் இரயிலில் நள்ளிரவில் ஆறு பெண் பயணிகளிடம் 26 சவரன் நகைகள் திருடப்பட்டது. 2015-ல் இதேபோன்று இரயிலில் திருடிவிட்டு ஜெயிலுக்கு போன வடமாநிலத்தை சேர்ந்த 7 பேர் தற்போது ஜாமினில் வந்ததும் மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று காவலாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பெங்களூரு மெயில் விரைவு இரயில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டுள்ளது.

அந்த இரயில் இரவு 11.45 மணிக்கு பங்காருபேட்டை இரயில் நிலையத்தில் நின்றுவிட்டு, ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.

ஆந்திர மாநிலம் மல்லானூர், வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் இரயில் நிலையங்களுக்கு இடையே அந்த இரயில் நள்ளிரவு 1 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது இரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட ஏ-2 பெட்டியின் இணைப்பு பெட்டியில் இருந்த பிரஷர் பைப்பை மர்ம நபர்கள் துண்டித்துள்ளானர்.

இதனால் இரயில் நடுவழியில் நின்றுவிட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் எஸ்.3, எஸ்.4, எஸ்.6, எஸ்.7, எஸ்.8 ஆகிய முன்பதிவு பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

அதில், சென்னை பெரியார் நகர் பட்டாபிராமன் என்பவரின் மனைவி காமாட்சியிடம் இருந்து 6½ சவரன் சங்கிலியையும், பெங்களூரு கொடிசிகண்ணஹள்ளியைச் சேர்ந்த அறிவொளி என்பவரின் மனைவி சரஸ்வதியிடம் (41) 5 சவரன் சங்கிலியையும், சென்னை லீவ்புதிய காலனி நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி பிருந்தாவிடம் (26) 1½ சவரன் சங்கிலியையும், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரேம்கிரண் என்பவரின் மனைவி சேஷகுமாரியிடம் 2 சவரன் சங்கிலியையும், பெங்களூரு ராமசாமிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி மீனாட்சியிடம் (30) இருந்து 4 சவரன் சங்கிலியையும், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரகமதுல்லா என்பவரின் மனைவி சாயிஸ்தாவிடம் (40) 7 சவரன் சங்கிலியையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இதனால், அந்த பெண்கள் அலறியுள்ளனர். இந்த அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் எழுவதற்குள் மர்ம நபர்கள் இரயிலில் இருந்து கீழே குதித்து ஓடிவிட்டனர்.

அதன்பிறகு சுமார் 10 நிமிடம் வரை நின்ற அந்த இரயில் மீண்டும் அங்கிருந்து ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஆறு பயணிகளும் புகார் அளித்தனர். மொத்தம் 26 பவுன் நகை கொள்ளை போனது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை இரயில்வே காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனிவிஜயா, சேலம் இரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன், இரயில்வே காவல் ஆய்வாளர்கள் லட்சுமி (ஜோலார்பேட்டை), இளவரசி (சேலம்), சின்னதங்கம் (ஈரோடு) ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நிகழ்விடத்தை பார்வையிட்ட காவல் அதிகாரிகள் அங்கு விசாரணையை மேற்கொண்டனர்.

இரயில் கொள்ளை நடந்த அதே இடத்தில் ஏற்கனவே இரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தி கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து சேலம் இரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 2015-ஆம் ஆண்டு இதேபோல் நடந்த சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் அவர்கள்தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.

கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரயில் பயணத்தின்போது, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் வாட்ஸ்அப் எண் 9962500500, உதவி எண் 1512 ஆகியவற்றை பயணிகள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த எண்களில் நீங்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்பவர்கள், தூக்கம் வந்ததும் ஜன்னலை அடைத்துவிட்டு தூங்குங்கள். அப்படி செய்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெற வாய்ப்பு இருக்காது. பயணிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.