சிவகங்கை

சிவகங்கையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போக்குவரத்து நகர்  பகுதியில் வசித்து வருபவர் லெட்சுமணன் (65). இவர் காரைக்குடி அரசுப் போக்குவரத்துக்கழக பணி மனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

இவர் குடும்பத்துடன் நேற்று காலையில் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலையத்தில் லெட்சுமணன் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெளியூர் சென்றுவிட்டு திரும்பி  வருவதற்குள் வீட்டில் இருந்த நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.