Jazz cinema scenes canceled

ஐ.டி. ரெய்டு காரணமாக சென்னை, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஜாஸ் சினிமாசின் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சசிகலா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இன்று மாலை வரை சோதனை தொடரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

வேளச்சேரியில் உள்ள ஜாஸ் திரையரங்கம், கிண்டியில் உள்ள அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா பார்ப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு, பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஜாஸ் திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.