Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா காட்டிய வழியில் மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்துகிறது – அமைச்சர் மணிகண்டன்…

Jayalalithaa on the way to implement the public welfare schemes of the Government of Sri Lanka - Minister Manikandan ...
Jayalalithaa on the way to implement the public welfare schemes of the Government of Sri Lanka - Minister Manikandan ...
Author
First Published May 29, 2017, 7:46 AM IST


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள சட்டக் கல்லூரியை குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மணிகண்டன், “ஜெயலலிதா காட்டிய வழியில் அவருடைய அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் புதிய அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜனுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியைப் பின்பற்றிச் செயல்படும் தமிழ்நாடு அரசு அவருடைய அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

குறைந்தச் செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த சட்டக்கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கையை முதலமைச்சரிடம் வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் புதிதாக ஒரு சட்டக்கல்லூரி 2017–18–ஆம் கல்வியாண்டில் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய அரசு சட்டக் கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், நூலக புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ.2 கோடியே 27 இலட்சம் செலவினம் ஏற்படும்.

இப்புதிய சட்டக் கல்லூரியில் 2017–18–ஆம் கல்வியாண்டில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும், ஐந்து ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் படிக்கும் வகையில் சேர்க்கை நடைபெறும்.

இப்புதியச் சட்டக்கல்லூரி நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தனி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பெருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் இராமநாதபுரம் புதிய சட்டக் கல்லூரிக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தற்காலிக இடம் தேர்வு செய்து சட்டக்கல்லூரி நடத்தப்படும்.

ஜூலை முதல் வாரத்தில் சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்கும். அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய சட்டக்கல்லூரி அறிவித்த முதலமைச்சருக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பேபி, இராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios