சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தில் இருந்து அவருக்கு விலக்கு தரக்கூடாது என கர்னாடக அரசு மனு அளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இதில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. பெங்களூரு நீதிமன்றம் அளித்த தண்டனை மற்றும் அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கும் முறை குறித்த தெளிவு இடம்பெறவில்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதத் தொகையை வசூலிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தில் இருந்து அவருக்கு விலக்கு தரக்கூடாது என கர்னாடக அரசு மனு அளித்துள்ளது.