ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை கொண்டாடவும், வசதி இல்லாதவர்களுக்கு உதவவும் பூங்குன்றன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- உடன்பிறப்பே! புரட்சித்தலைவியை நீங்கள் கொண்டாடவேண்டும். தெய்வமாக போற்றவேண்டும். வழிபடவேண்டும். வாழ்த்த வேண்டும். புரட்சித்தலைவருக்கு பின்னால் இந்தக்கட்சியை காப்பாற்றி நம்மை வாழ வைத்திருக்கிறார் என்றால் அதற்கு நாம் என்ன செய்தாலும் தகும். ஒரு பெண், ஆண் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தமுடியுமா? ஆண்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? 

பெண் என்றால் விமர்சனம் சீறிப்பாயும் அல்லவா? பெண் ஆளுவதை மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? எத்தனை வசை பாடல்கள்.. அத்தனையும் தாண்டி வழக்குகளால் தன்னைக் கட்டி போட்டபோதுகூட நமக்காக, நம் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒரு பெண்ணாக இருந்து இன்று இந்தக்கட்சியை காப்பாற்றியிருக்கிறார் என்றால் அவரது பிறந்த நாளை எப்படி நாம் கொண்டாடவேண்டும். நாம் கொண்டாடுவதை பார்த்து மக்கள் வியக்கவேண்டும். உண்மையான விசுவாசிகள் இவர்கள் அல்லவா! என்று நம்மை வாழ்த்தவேண்டும். 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! புரட்சித்தலைவி என்ற இரும்பு பெண்மணி மட்டும் அன்று இந்தக்கட்சியை வழிநடத்தவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் நம்முடைய கட்சியை காணாமல் செய்திருப்பார்கள். புரட்சித்தலைவியை எதிர்த்தவர் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அரசியலில் பழுத்த அவரையும் எதிர்த்து வெற்றிவாகை சூடி தொண்டர்களை மகிழ்வித்தவர் நமது தாய். புரட்சித்தலைவி, தன்னுடைய உயிருக்கு மேலாக கட்சியை நேசித்தார். அவரது பிறந்தநாளில் வசதி உள்ளவர்கள், வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம். 

வசதியும், வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது வசதி குறைந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து நிதியை திரட்டி இந்த கட்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கும், கலைக்குழுவினருக்கும் வழங்குவது இந்தக் கட்சி என்ற ஆலமரத்திற்கு உரம் போடுவதற்கு சமம். வசதியற்ற நிலையில் இன்னும் கட்சிக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உழைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். போன இடத்தில் மரியாதை குறைவு நடந்தாலும் கட்சிக்காக அதை ஏற்றுக்கொள்பவர்கள் அவர்கள். வாய்ப்புகள் வந்தாலும், வரவில்லை என்றாலும் இந்த இயக்கத்தோடு இரண்டற கலந்திருப்பவர்கள் அவர்கள். 

இன்னும் பலர் கடும் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. சிரமத்தையும் பொருட்படுத்தாது இயக்கத்திற்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதைக் காட்டிலும் இவர்களுக்கு உதவி செய்வது இந்த கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல..! அவர்கள் மகிழ்ச்சி கட்சிக்கு எழுச்சியை தரும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும். செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா! என தெரிவித்துள்ளார்.