ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து பணிகளை தொடர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினமும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் தீச்சட்டி ஏந்துவது, அலகு குத்துவது உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்ற அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஆயிரக்ககணக்கான மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்வது போல நானும் பிரார்த்திக்கிறேன். முதலமைச்சருக்கு சிறந்த முறையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதால், அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

இது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து பணிகளை தொடர என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.