முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர்கள் கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிமுகவினர் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதிமுக தொடண்ர்கள் மொட்டையடித்து தீப வழிபாடு நடத்தினர்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து உள்ள அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, சிங்கப்பூரை பிசியோதெரபிஸ்ட் பெண் நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரின் சிறப்பான சிகிச்சையால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வார இறுதியில் அவரை, தனி வார்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். அவருக்கான தனி அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்ததும், அ.தி.மு.க.வினர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க. வினர் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.

நேற்று அப்பல்லோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க. மகளிரணியினர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் 108 தேங்காய்களை உடைத்தனர். ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்த செய்தியை அனைவருக்கும் கூறி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் 15 பேர் மொட்டை அடித்து சிறப்பு தீப வழிபாடு நடத்தினர். கையில் தீபத்தை ஏந்தியபடி அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முழுவதும் ‘ஓம் சக்தி, ஓம் சக்தி’ என கோஷமிட்டபிடி பக்தி பரவசத்துடன் நடந்து சென்று பிரார்த்தனை நடத்தினர்.