சென்னை அப்பல்லோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டதும் அ.தி.மு.க். தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். மக்கள் கண்ணீருடன் சோகத்துடன், சென்னையின் அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக நிற்கத் தொடங்கினர்.

அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல், சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைகள் காரணமாக உடல் நலன் தேறிவந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து அவரை சந்தித்து, மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து கேட்டுச் சென்றார்.

இந்நிலையில் வீண் வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்றும் முதல்வர் நலமாக உள்ளார் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் உலா வருகிறது.
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பா? அல்லது போட்டோஷாப் வேலையா என்பது உறுதிபடுத்தப்படவில்லை.
