அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கான உணவை அவரே, சாப்பிடுவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் எனவும் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினமும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் தீச்சட்டி ஏந்துவது, அலகு குத்துவது உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்போலோ மருத்துவமனை முன்பும் ஏராளமான பெண்கள் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தனக்கான உணவை அவரே எடுத்து சாப்பிடுகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து கொள்கிறார். அவர் விரைவில் மக்கள் பணியாற்ற மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். எனவே விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என கூறினார்.
