ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் படி 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகவில்லை. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை சசிகலா உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் 3-முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இன்றும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. ஏற்கனவே டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 7 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.