சமூக வலைதளங்களில் வந்த தகவல்கள் அடிப்படையிலேயே, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தேன் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்யது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா திடீர் உடல்நிலைக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, போயஸ் கார்டனில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டாரா? ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து, கொலை செய்யப்பட்டார் என்று கூறி வருகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பினார். 

அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து பேட்டி அளித்தேன் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டதால் தான் அவர் உடல்நிலையில் கடும் பாதிக்கப்பட்டதாக டாக்டர் ஒருவர் அளித்த பேட்டியை குறிப்பிட்டு தான் நானும் சந்தேகம் எழுப்பினேன் என்று கூறினார். 

அதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் பொன்னையனிடம், ‘ஆணி கட்டையால் ஜெயலலிதா கன்னத்தில் அடித்தார்கள், ஜெயலலிதா கால் வெட்டி எடுக்கப்பட்டது என்று எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் எனக்கு ஞாபகம் இல்லை என்றார். இது போன்று பல கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை. தெரியாது என்றே பதில் அளித்தார். இதனால், ஆணைய நீதிபதி எந்த அடிப்படையில் நீங்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பினீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து சந்தேகம், அந்த அடிப்படையில் தான் நான் பேட்டி கொடுத்ததாக கூறினார். 

இந்த விசாரணைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறுகையில், ஆணையத்தில் சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆணையம் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.