மூன்று மாதங்கள் கால நீட்டிப்புக் கேட்டு தமிழக அரசுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மேலும் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி உடன் விசாரணை ஆணையம் முடிவடையும் நிலையில், மீண்டும் கால நீட்டிப்பு கேட்டு கடிதம் அனுப்ப உள்ளார்.

 

மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பல்வேறு தகவல்களை ஆணையம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆணையம் அமைக்கப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. ஆனால், 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க முடியாத நிலையில் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து மேலும் 4 மாதங்கள் கால நீட்டிப்பு கேட்கப்பட்டது. ஆறுமுகசாமியின் கால நீட்டிப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த கால நீட்டிப்பு வரும் 24 ஆம் தேதியுடன் முடிகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டியுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்கள் சிலரும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரை விசாரிக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

 

இந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த கடிதத்தை நாளை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுமுகசாமி ஆணையின் காலக்கெடு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, திட்டமிட்டபடி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.