தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக்,மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் சென்னை நகர் முழுவதும் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசார், கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, குட்கா பொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்தால், குண்டர் சட்டம் பாயும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் பல இடங்களில் உள்ள குடோன்களில், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.

இதையொட்டி, சென்னை பூக்கடை, சவுகார்பேட்டை, தங்கசாலை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகம், தனியார் குடோன்களில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வந்த ஒரு வேனில் இருந்து 50 மூட்டைகள் இறக்கப்பட்டன.

இதை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. வேன் டிரைவரிடம் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது. தனது அலுவலக மேலாளர் இந்த பார்சலை, இங்கு கொடுத்துவிட்டு வரும்படி கூறினார். அதை செய்தேன் என்றார்.

இதையடுத்து போலீசார், அந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது, அதில் மாவா எனப்படும் போதை பாக்குக்கு பயன்படுத்தப்படும் ஜர்தா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்றனர்.

அங்கிரந்த குடோன் மேலாளர் சரவணனை கைது செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குடோன் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.