கடந்த ஜன 23 வன்முறையின் போது வடக்கு மண்டல இணை ஆணையர் கார் டிரைவரின் முகத்தில் மிளகாய்பொடி தூவி கட்டையால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தி காரையும் எரித்த கும்பலின் முக்கிய குற்றவாளி பிடிபட்டான்.

ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்தில் மாணவர் போர்வையில் புகுந்த சமூக விரோத கும்பல் சென்னை முழுதும் வன்முறையில் ஈடுபட்டது. ஜன. 23 அன்று எழும்பூர் நாயர் பாலம் மறியலில் ஈடுபட்டு வாகனங்களை தாக்கிய மர்ம கும்பலை கலைக்க வடக்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் மற்றும் கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி ஆகியோர் அதிரடி படை வீரர்களுடன் சென்றனர்.

அப்போது சந்தோஷ்குமார் மற்றும் அதிரடி படையினரை விரட்டிய கும்பல் சந்தோஷ்குமார் வந்த வாகனத்தை சூழ்ந்தது. டிரைவர் செந்தில்குமார் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய கும்பல் அவரது காரை தாக்கி சேதப்படுத்தியது.

கும்பலில் இருந்த தினேஷ் என்பவன் செந்தில்குமார் முகத்தில் கட்டையால் குத்தி தாக்கி , வெளியே இழுத்து கும்பலுடன் சேர்ந்து கொலைவெறியுடன் தாக்கினான். இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இடது கை முறிந்தது. உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டது. அத்தோடு நிற்காத அந்த கும்பல் இணை ஆணையர் வாகனத்தை கவிழ்த்து தீயிட்டு எரித்தது. இதில் கொலைமுயற்சி , பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உட்பட வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார் நான்கு முக்கிய குற்றவாளிகள் உட்பட 30 பேரை தேடி வந்தனர். 

மற்ற அனைவரும் பிடிபட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான , எழும்பூர் , குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, டாக்டர் சந்தோஷ்நகரில் வசித்து வரும் சிவகுமார் எனபவரின் மகன் தினேஷ்(22) தலைமறைவாக இருந்தான். 

அவன் வியாசர்பாடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தினேஷை பிடித்தனர். பின்னர் காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட தினேஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான் என தெரிகிறது.