புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மீளமுனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி 902 காளைகள் பங்கேற்ற சல்லிக்கட்டுப் போட்டி நடைப்பெற்றது. இதில், காளைகள் முட்டி தூக்சி வீசியதில் 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் மீளமுனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி சல்லிக்கட்டு நடத்த  விழாக் குழுவினர், ஊர்பொதுமக்கள் முடிவு எடுத்தனர். 

அதன்படி மீளமுனீஸ்வரர் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, தடுப்புக் கட்டைகள் போடப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தனர்.

இதனையடுத்து நேற்று காலையில் சல்லிக்கட்டில் கலந்துகொள்ள வந்த காளைகளை கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவர்கள் உடல் தகுதி பரிசோதனை நடத்தினர். 

இதனையடுத்து மாடுபிடி வீரர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி முன்னிலையில் சல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், சல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, கறம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 902 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 250 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்தன. சில காளைகள் வீரர்களை முட்டி மோதி தூக்கி வீசி பந்தாடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், குக்கர், உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 

சல்லிக்கட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட உதவி ஆட்சியர் கே.எம்.சரயு, கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். 

சல்லிக்கட்டையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல்முத்தலிப்பு மற்றும் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.