தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 3 நாட்களாக இரவும், பகலுமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர்களுக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், ஐடி ஊழியர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட அனைத்து மாநிலத்திலும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. மேலும், சிங்கப்பூர், கனடா, மலேசிய, இந்தோனேஷியா உள்பட பல நாட்டினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு, கொட்டும் பனியில் துவங்கிய மாணவர்கள் போராட்டம், நேற்று கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் தற்போது வரை ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள பெண்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் “வாடி வாசல் திறந்தால் தான் வீட்டு வாசலை திறப்போம். ஒன்று ஜல்லிக்கட்டு நடத்து, இல்ல ஆட்சியை தடுத்து நிறுத்து” என்று மதுரை பெண்கள் சூளுரைத்து கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நெல்லை, சேலம், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.