தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இப்போராட்டம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் வீறு கொண்டு பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, துத்துக்குடி,ஈரோடு என அனைத்துப் பகுதிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்று வருகிறது.
அறவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து வருகிறது. சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை மெரினாவில் இன்று போராட்டக்காரர்கள் மத்தியில் திடீரென சீருடையில் தோன்றிய காவலர் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
தமிழக பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.இந்த போராட்டத்தில் தானும் கலந்து கொள்வதாக தெரிவித்தார். நாம் அனைவரும் காந்திய வழியில் போராடி வருகிறோம், ஆனால் காந்தி பிறந்த மண்னில் தோன்றி மோடி இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்லாமல் நாம் அனைவரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அந்த காவலரின் பேச்சு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.அவரை போராட்டக்காரர்கள் கொண்டாடினர்.
