ஜல்லிக்கட்டு தடை முடிவுக்கு வந்தவுடன் எங்களின் போராட்டம் நின்று விடாது. தமிழகத்தில் அடுக்கடுக்காக இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் இது போல் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என்று மெரீனாவில் கூடிய இளைஞர்கள் தெரிவித்தனர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது ஆண்டாக தடை நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் தன்னெழுச்சியுடன் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் 16-ந்தேதியும், சென்னையில் 17-ந்தேதியும் தொடங்கிய போராட்டமும் 4 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் என அனைவரும் மதச்சார்பின்றி அமைதியான வழியில் அறப்போராட்டத்தை மிகவும் ஒழுக்கமான முறையில் நடத்தி வருகின்றனர்.
எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்காமல், இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் வழியாக இணைந்து போராட்டங்களை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் மாநிலம் முழுவதும் மாணவர்களோடு பல தன்னார்வ அமைப்புகளும் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டியோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஜல்லிக்கட்டோடு முடிந்துவிடாது, அனைத்து பிரச்சினைகளுக்கும் இதேபோல் இறங்கி போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக இணையதளம் வாயிலாக அனைவரும் கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக டின்.ஸ்டூடன்ட்ஸ்.ஜல்லிக்கட்டு(tn.students.jallikattu.com) என்ற இணையதளத்தில் போய் தங்களின் விருப்பங்களையும், எண்ணங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்'' எனத் தெரிவித்தார்.
