ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அவசரச்சட்டம் ஒரிரு நாட்களில் தமிழக அரசு பிறப்பிக்க இருக்கும் நிலையில், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பார்த்து ஆய்வு செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடை தொடர்ந்து 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்திய தீர வேண்டும் என்று தீர்க்கமான முடிவுடன் இளைஞர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் என தொடர்ந்து 4-வது நாளாக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில அரசு சார்பில் பலகட்ட பேச்சு நடத்தியும், இளைஞர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நடக்கும் வரை வாபஸ் பெறப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச்சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச்சட்டம் இயற்ற வலியுறுத்தினார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் அவசரச்சட்டம் இயற்ற இயலாது என்று மோடி கைவிரித்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை திரும்பாமல் டெல்லியில் தங்கிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கேயே அவசரச்சட்டம் குறித்து வரைவுகளைத் அதிகாரிகளுடன் தயார் செய்தார். அந்த அவசரச்சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைச்செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால், அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உண்டாகியுள்ளது. டெல்லி பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், “ அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும், வாடிவாசலில் காளைகள் துள்ளிவரும், ஜல்லிக்கட்டை நானே தொடங்கிவைப்பேன்'' என்றார்.
இதற்கு ஏற்றார்போல், முதல்வரின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிவாசல்கள், ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களை ஆய்வு செய்தார். இவர் ஆய்வு செய்தது, போராட்டம் நடத்தி வரும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் வீரராகவ் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “ தமிழக அரசு விரைவில் அவசரச்சட்டம் கொண்டு வந்து , ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன் ஏற்பாடாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் வாடிவாசல்கள், ஏற்பாடுகளை நேரில் வந்து ஆய்வு செய்தேன்'' என்றார்.
