அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறார். அப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச்சட்டத்திதல் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் 

தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். 

இளைஞர்களின் இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாத மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க முடிவு செய்தது. இதனையடுத்து, தமிழக அரசு அனுப்பிய அவசரச் சட்ட வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவிற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் கலாச்சார துறை அமைச்சமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து, தமிழக அரசின் சட்ட வரைவானது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் கையெழுத்து தேவையில்லை என்றும், ஆளுநர் கையெழுத்து மட்டுமே போதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நாளை வர இருந்த தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை 4 மணிக்கு மும்பையிலிருந்து, அவசரமாக சென்னை திரும்புகிறார். அவசல சட்டத்தில் கையெழுத்திடுகிறார். இதைனைத் தொடர்ந்து நாளை அலங்காநல்லுரில் நாளை உற்சாகமாக வாடிவாசல் திறக்கப்படும் என தெரிகிறது.